Skip to main content

e-iEvolve

திரு. ஈசுவரன் – தரமான கல்விக்கும் ஆசிரியர்களுக்கும் ஓர் உந்துசக்தி

பிறப்பும் ஆரம்பகாலப் பணியும்

திரு. சு. ஈசுவரனின் வாழ்க்கைப் பயணம் இந்தியாவின் தென்கோடியில் தொடங்கியது. திருப்புனல்வாசலில் பிறந்த சுப்பிரமணியன் ஈசுவரன், இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் வளர்ந்தார். பள்ளிக் கல்வியைச் சிறப்பாக முடித்து, ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இராமநாதபுரம் மாவட்டத்தின் கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பணியாற்றினார். உள்ளூர் மக்களுடன் இணைந்து செயல்பட்ட அவர், கிராமப்புற சமுதாயத்தின் நம்பிக்கை, மற்றும் உணர்வுகள் சமுதாய முன்னேற்றதின் முக்கிய காரணிகள் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். மக்களை ஒன்றிணைக்கும் திறன், விடாமுயற்சி மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால், கல்வியின் மூலம் சமூக மேம்பாடுகளுக்கு கல்வி மூலம் உதவ விளைந்தார். கிராமப்புறங்களில் கல்வியறிவை வளர்க்க, மக்கள் ஒன்றிணைந்து பின்வருவனவற்றை மேம்படுத்த வேண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், 1950களில் அவர் தொடங்கிய இந்தப் பணி, அவரது சொந்த மாநிலமான தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் ஆரம்பமானது. 1961ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை முடித்த பின்னர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் (TESTF) இணைந்தார்.

ஆசிரியர் கூட்டணிப் பணியின் தொடக்கம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை நிறுவிய திரு. மாஸ்டர் ராமுண்ணியுடன் அவர் நெருக்கமாக இணைந்து பணியாற்றியது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்தது. இராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் வட்டாரச் செயலாளராகத் 1961இல் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசிரியர்களின் உரிமைகள், பணித்திறன் வளர்ச்சி மற்றும் தொடக்கக் கல்வியின் மேம்பாட்டிற்காக உறுதியுடன் செயல்பட்டார். கல்வி, மற்றும் சமுதாய தேவைகளுக்கு ஏற்ப, ஆசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள 1974ஆம் ஆண்டு வரை வட்டார மற்றும் மாவட்ட அளவில் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டார்.

மாநிலத் தலைமையும் ஆசிரியர் கூட்டணிப் பணியும்

1975ஆம் ஆண்டு, திரு. ஈசுவரன் அவர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவரது ஆசிரியர் கூட்டணியின் நெடிய பயணத்தின் முதல் மைல் கல்லாக அமைந்தது. அடுத்த 22 ஆண்டுகள் தொடர்ந்து பலமுறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தப் பொறுப்பில் பணியாற்றினார். இந்தக் காலம் முழுவதும், கூட்டணியின் தலைவர் திரு. ஜே. எஸ். ராஜுவுடன் இணைந்து செயல்பட்டார். இருவரும் பல ஆசிரியப் பணிமேம்பாட்டு இயக்கப் போரட்டங்கள், அரசு பேச்சுவார்த்தைகள் மற்றும் மாநாடுகளை வழிநடத்தி, மாநில தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரமும் தொடக்கக் கல்வியின் தரமும் தமிழ்நாட்டில் உயர வழிவகுத்தனர்.