உலகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களின் குரலாக உலகளாவிய தொழிற்சங்கக் கூட்டமைப்பான Education International (EI) செயல்படுகிறது. இதில் 383 உறுப்பினர் அமைப்புகள் உள்ளன. 178 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள 3.25 கோடிக்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் கல்வி உதவிப் பணியாளர்களை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. திரு. ஈசுவரன் அவர்களின் உலகளாவிய சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் EI போன்ற உலகளாவிய அமைப்புடன் இந்திய ஆசிரியர்களை இணைக்கவும், 22 இலட்சத்திற்கும் அதிகமான இந்தியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் குரலை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லவும் உதவியது. பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் செயல்படும் EI அமைப்பின் செயற்குழு உறுப்பினராக மூன்று முறை (2001- 2009) தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொறுப்பில் அவர் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் தொடக்கக் கல்வியின் தரம், ஆசிரியர்களின் உரிமைகளை மேம்படுத்துவதில் EI அமைப்பின் பிரதிநியாக பல நாடுகளின் ஆசிரிய இயக்கங்களுடனும், அரசாங்கங்களுடனும் பணியாற்றினர். மேலும் கல்வியையும் ஆசிரியர்களையும் மேம்படுத்தும் இலக்கை அடைய, உலகளவில் கொள்கைப் பரிந்துரைகள், ஆசிரியர்களின் பணித்திறன் வளர்ச்சித் திட்டங்கள், சங்க வளர்ச்சித் திட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் மாநாடுகளை EI வாயிலாக கொண்டு சேர்த்தார் .
இந்தத் திட்டங்கள் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தின: • பன்னாட்டு ஆசிரியர்களிடையே ஒற்றுமையை வளர்த்தல். • புதிய கற்பித்தல் முறைகள் மூலம் தொடக்கக் கல்வியின் தரத்தை உயர்த்தல். • பெண் ஆசிரியர்களின் திறன்களையும் வாய்ப்புகளையும் வளர்த்தல். • குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் குழந்தைத் தொழிலாளர் முறை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்.
உலகளாவிய ஆசிரியர்களின் சமூக தொழில் சார்ந்த நிலையை மேம்படுத்த அவர் மேற்கொண்ட பணிகளுக்கான அங்கீகாரமாக, 2009ஆம் ஆண்டு டிசம்பரில் 188 நாடுகளின் ஆசிரியர் சங்கங்களால் EI அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டு தனது உலகளாவிய ஆசிரிய இயக்க பணிக்காக மூன்று முக்கிய இலக்குகளை திரு ஈசுவரன் அவர்கள் முன்வைத்தார்: • ஒற்றுமையை வளர்த்து ஆசிரியர் சங்கங்களை வலுப்படுத்துதல். • சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளித்து, இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல். • பள்ளிகளிலும் அதன் மூலம் சமூகத்திலும் பாலினச் சமத்துவத்தை உருவாக்குதல். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பில் (ILO) நிபுணராகவும் சிறப்புப் பணிக்குழு உறுப்பினராக கல்விக்காக அயராது செயலாற்றினார் . ஆசிரியர்களின் உரிமைகள், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, பெண்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றினை முன்னிறுத்தி பல திட்டங்களை செயல்படுத்தினார். EI துணைத் தலைவர் உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேசப் பொறுப்புகளில் தனுது இறுதி மூச்சுவரை (2014) அயராத இயக்க, ஆசிரிய மற்றும் கல்வி பணியாற்றியே தன் வாழ்வை நிறைவு செய்தார். தனது வாழ்க்கையின் எல்லா வெற்றிகளையும், சாதனைகளையும் சங்கத் தோழர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வியாளர்களுக்கே அர்ப்பணித்தார். அவர்களைத் தனது இந்தியக் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே என்றும் கருதி அணுக்கத்துடனும், சகோதரத்துவத்துடனும் மகிழ்வுடன் இயக்கபணியையே தன் வாழ்வாக வாழ்ந்தார்.
தொடக்கக் கல்விக்கான திரு. ஈசுவரனின் இலட்சியம் எல்லையற்றதாக இருந்தது. வாசிக்கவும் எழுதவும் கணக்கிடவும் கற்றுத்தருவதைக் கடந்து, குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்காக TESTF, AIPTF மற்றும் EI வழியாகத் தொடர்ந்து அரசுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார். இந்தியாவில் மற்றுமின்றி, உலகம் முழுவதும் அனைவருக்கும் கட்டாயக் கல்வியும் தனது காலத்திலேயே நடைமுறைக்கு வர வேண்டும் என்று விரும்பி, எத்தியோப்பியா முதல் ஸ்வீடன் வரை, ஜப்பான் முதல் பிரேசில் வரை சென்று அந்நாடுகளின் தொடக்கக் கல்வி முறைகளையும் ஆசிரியர்களின் பணிநிலையையும் நன்கறிந்தார். கல்வியின் தரத்தையும் ஆசிரியர்களின் நிலையையும் மேம்படுத்த அங்குள்ள ஆசிரிய இயக்கங்களுடன் இணைந்து அந்தந்த நாட்டின் தேவைகளுக்கேற்ற கல்விக்கொள்கைகளை அரசாங்கங்களுடன் வரையறுக்க முயன்றார்.